எச்சரிக்கை.! அரசியல் புரோக்கர்களின் எண்ணம் நிறைவேறாது.. திமுகவுடன் தான் கூட்டணி.! விசிக உறுதி.! 

DMK-and-VCK-Leaders

நேற்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தொடர்ந்து அதிமுக தலைவர்கள் மீது பாஜக தலைவர்கள் விமர்சித்து  காரணத்தால், பாஜவுடனான கூட்டணியை அதிமுக  முறித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டணி முறிவு அறிவிப்பை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து,  தமிழக அரசியலில் மற்ற கட்சிகளின் கூட்டணி முடிவுகள் மாறும் சூழல் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் விசிக கட்சியும் தங்கள் கூட்டணி முடிவை மாற்ற வாய்ப்புள்ளது என சமூக வலைத்தளங்கள் சிலாகித்து வந்த நிலையில் அதனை விசிக முற்றிலுமாக மறுத்துள்ளது.

இது குறித்து விசிக கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021 ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம். ஆகவே,திமுக தலைமையலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.

இச்சூழலில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன், விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும்.

அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசை திருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்