தவெக மாநாடு : முக்கிய விவரங்களை சேகரிக்கும் உளவுத்துறை?
சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு அழைத்து சென்ற நிர்வாகிகளை உளவுத்துறை போலீசார் போன் செய்து விவரங்களை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27இல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதுவரை திரையில் கண்ட தங்கள் ஆஸ்தான ஹீரோவை கட்சித் தலைவராக காண மாநாட்டிற்கு ரசிகர்கள் தொண்டர்களாக வெள்ளம் போல திரண்டனர்.
சுமார் 13 லட்சம் பேர் தவெக முதல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் விஜய் பேசிய திராவிடம், தமிழ் தேசிய கருத்துக்கள், திமுக – பாஜக மீதான எதிர்ப்பு கருத்துக்கள், கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற பல்வேறு கருத்துக்கள் தற்போது வரையில் அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது.
இப்படியான சூழலில், இன்று சென்னை தவெக நிர்வாகிகளை உளவுத்துறை காவல் பிரிவினர் போன் செய்து விசாரணை செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவல் அடிப்படையில் கூறப்படுகையில், சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு மக்களை அழைத்து சென்றது யார் யார்? அவர்கள் பெயர், முகவரி, அவர்கள் வேறு கட்சியில் இருத்துள்ளனரா? கலந்து கொண்டவர்கள் விவரம் என வார்டு வாரியாக இந்த போன் விசாரணையை உளவுத்துறை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுளளது.