ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின் உருக்கம்
ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்இந்த இரு பெயர்களை கடந்த சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. காவல் துறையின் வன்முறையால் ,அராஜகத்தால் இருவரையும் இன்று நாம் இழந்து நிற்கிறோம்.கடந்த இரு தினங்களாக இந்த சம்பவம் பற்றி வரும் செய்திகளை ,புகைப்படங்களை,உறவினர்கள் ,நண்பர்கள் பகிரும் சோகங்களை காணும் போது மனம் ஏற்க மறுக்கிறது. இந்த இருவருக்கும் ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை.இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அநீதியும் சோகமும் வார்த்தைகளால் அடக்கமுடியாதவை.
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையில் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றது.கொடூரத்தின் உச்சமாக ஆசன வாயிலில் லத்தியை கொண்டு தாக்குதல் ,நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தல் என்று கேள்விப்படும் ஒவ்வொரு செய்தியும் மனதை உலுக்குகிறது.இந்த மனிதாவிமானமற்ற, மிருகத்தனமான செயல்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது.தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்கு தாமதமாக்கினார்கள் என்ற காரணத்திற்க்காக இப்படிப்பட்ட தாக்குதலை நிகழ்த்த காவல் துறைக்கு யார் அனுமதி தந்தது ? ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை.எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக நிற்க திமுக சார்பில் 25 லட்ச ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளோம்.இந்த வழக்கின் விசாரணை வேகமாகவும் ,தீவிரமாகவும்,நேர்த்தியாகவும் நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும் .இந்த உயிர்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர் தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
#JusticeForJayarajAndFenix https://t.co/9Gpib4q03G
— M.K.Stalin (@mkstalin) June 26, 2020