இந்திய வானிலை மையம் கணிக்கத் தவறியுள்ளது – பூவுலகின் நண்பர்கள் சாடல்!
இந்திய வானிலை மையம் கணிக்கத் தவறியுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும். இதனால், அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29ம் தேதியே எச்சரித்தது மத்திய நீர் ஆணையம் (Central Water Commission). ஆனால், 29, 30ஆம் தேதிகளில் வெளியேறறாமல் 1ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீரை திறந்துவிடபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
தற்பொழுது, சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிகனமழையின் தீவிரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறியுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபெஞ்சல் புயலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் போதுமானதாக இருந்ததா என்பது குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியான
நேரத்தில் நீரைத் திறந்துவிடுவதற்கும் மக்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.