8-வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8-ஆவது நாளாக சோதனை.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது கரூரில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு உள்ளதா? வரி சரியாக காட்டுகிறார்களா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் எம்சி சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடந்தாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று 8-ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8-ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.