நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தவறானது – தொல்.திருமாவளவன்
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து.
தருமபுரி அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தவறானது என தெரிவித்தார்.
இதனை திமுக தலைமை ஒருபோதும் அங்கீகரித்த நிலையை நான் பார்க்கவில்லை. அவர்கள் தன்னிச்சையாக மேடையில் அவதூறு பேசியதை, எதிர்த்ததாக அந்த பகுதியை சார்ந்த திமுகாவினர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். இருந்தாலும் கூட, கருத்துக்கு, கருத்தை தான் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வன்முறை கூடாது எனவும் கூறினார்.
இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்று பெரிதும் நம்புவதாக கூறினார். அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை முன்மொழியும் நேரத்தில் கருத்துக்கு கருத்தாகத்தான் அணுக வேண்டுமே தவிர வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.