சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!
முக ஸ்டாலின் ஆட்சியில் வேதனைப்படக்கூடிய விஷயங்கள் தான் நடந்து கொண்டு இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது. பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த தேதியில் சீமான் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதன் காரணமாக, அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சம்மன் எழுதி ஓட்டினார்கள். அதை தொடர்ந்து, போலீசார் ஓட்டிய சம்மனை வீட்டில் வேலை செய்பவர் கிழித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை விசாரிக்க சென்ற போலீசாரையும் பணி செய்ய விடாமல் தடுத்ததால் அவரது வீட்டிற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதால் இன்னுமே பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து தடுத்தவரையும், மிரட்டியவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த நாள் இரவு சீமானும் விசாரணைக்கு ஆஜரானார். இருப்பினும், அங்கிருந்த நபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. அதைப்போல அவரை கைது செய்தது குறித்தும் அரசியல் தலைவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” முக ஸ்டாலின் ஆட்சியில் வேதனைப்படக்கூடிய ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நேற்று சீமான் வீட்டில் நடந்த சம்பவம் தான். அவருடைய வீட்டில் காவலாளி ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரரை கைது செய்த நடவடிக்கையை பார்க்கையில் சர்வாதிகாரமான ஒரு ஆட்சியை தான் மக்கள் இந்த ஆட்சியை பார்க்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது கண்டிக்க தக்க வேண்டிய விஷயம் ‘ எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.