“நோய் தாக்கம் தமிழகத்தில் நிச்சயம் அதிகரிக்கும்” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Default Image

சென்னை:15 – 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்த பின்னர், தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும் எனவும், ஆனால்,அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது. எனவே,கட்டாயம் அதை அணிய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று முதல் (ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து) 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே  அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் இணையதளத்தில் நேற்று முன்தினம் முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும்,ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாடு முழுவதும் இன்று காலை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,தமிழகத்தில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்:”தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும்.ஆனால்,அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது.நீங்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கில் இதை கூறவில்லை.மாறாக,அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிவுறுத்துகிறேன்.அதுதான் என் மனதிற்கு மகிழ்ச்சி.

மேலும்,ஒமைக்ரான் என்ற புதிய தொற்று,புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது.ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதன் காரணத்தால் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருந்த நமது பயணம் தடைபடும் சூழல் நிலவுகிறது. எனினும்,முந்தைய கொரோனா வைரஸை விட ஒமைக்ரானின் நோய் தாக்கம் குறைவுதான்.

எனினும்,தடுப்பூசி செலுத்துங்கள் என அன்போடு,பணிவோடு, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில்,தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவு.எனவே,புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம்.நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்க வேண்டும்,அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்