ராஜராஜ சோழன், பிரபாகரன் வரலாறு படமாகிறது.. இயக்கம் – வெற்றிமாறன்.! தயாரிப்பு – சீமான்.!
ராஜராஜ சோழன், பிரபாகரனின் “உண்மை” வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்துள்ளார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, விசிகவின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்தது விளைவாகத்தான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடனும் இருந்து வருகிறது. திருவள்ளூர்க்கு காவி உடை கொடுப்பது. ராஜா ராஜா சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடம் இருந்த அடையாளங்களை பறித்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.
சினிமா என்பது எளிதில் மக்களிடையே செல்லக்கூடிய கலை வடிவம். சினிமாவில் அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானவை என்றும் கூறினார். வெற்றிமாறனின் கருத்துக்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒருபக்கம் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தற்போது அவரின் பேச்சு பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், ராஜராஜ சோழன், பிரபாகரனின் “உண்மை” வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார். pic.twitter.com/e4IwrcG51c
— சீமான் (@SeemanOfficial) October 5, 2022