சென்னையின் வரலாறு என்ன ?
ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த குறிப்பில் சென்னையின் வரலாறு குறித்து நாம் பார்ப்போம்…
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
1639-ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான “சென்னை மாகாணம்” என்ற பெயர் பெற்றது.
1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் ஆனது. சென்னை மாகாணம் 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் என்பதும் 1996-ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956-ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1966-இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை ‘சென்னப்ப நாயக்கர்’ பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.