சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்கள்! தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு!
சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 2 வயது மகள் கவிஷ்கா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், அதற்கு 5 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, செய்தியறிந்த நந்தம்பாக்கம் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அறுவை சிகிச்சை நடைபெற உதவியுள்ளார். இதேபோல் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் அந்த காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து காவலர்களும் 45 ஆயிரம் ரூபாய் வரை பணம் அளித்துள்ளனர். மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டு அந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டி.ஜி. ஆனந்த், நந்தம்பாக்கம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.