ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் பன்வாரிலால் புரோகித்..!
ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு, குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
மாநாட்டை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகள், அரசு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலம் டெல்லி சென்றார்.