7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காது காலந்தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாது நியமனப்பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.
எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநரை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.