தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் – அமைச்சர் மெய்யநாதன்

தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து இன்று மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
4*400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் ரேவதி வீரமணி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் களம் காண உள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.