இனியும் காலங்கடத்தாமல் ‘நீட்’ தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்..! – சீமான்

நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில், இந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில், இந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த தம்பி சுபாஷ் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். நீட் தேர்வு காரணமாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்தேறும் இக்கொடும் நிகழ்வுகளை தடுக்க தவறிய ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தேற்றவியலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கிற தம்பி சுபாஷ் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
தங்கை அனிதாவில் தொடங்கி சுபாஷ் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பெருங்கவலையை தருகிறது. 2017ல் ஆம் ஆண்டு அனிதா வில் தொடங்கி, 2018ல் இரண்டு பேர், 2019 ஆம் ஆண்டு 4 பேர், 2020 ஆம் ஆண்டு 5 பேர், இந்த ஆண்டு தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா, தற்போது தம்பி சுபாஷ் உட்பட 4 பேர் என இதுவரை 16க்கும் மேற்பட்ட பிஞ்சுப்பிள்ளைகளின் மரணங்கள் பெரும் ரணத்தையும், தாங்கவியலா வேதனையையும் அளிக்கிறது. மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.
இத்தகைய துயர்மிகு சூழலில் இழைக்கப்படும் அநீதியைக் கண்டு ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் நெஞ்சில் எழுகிறது. நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் பச்சைப்படுகொலையாகும். தமிழர்களுக்கெதிரான ஒன்றிய அரசின் நயவஞ்சகத்தனமும், அதற்கு ஒத்திசைந்து போகும் திராவிட அரசுகளின் கையாலாகத்தனமுமே இத்தனை பேரின் உயிரைப் போக்கியிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காகவோ, அதனை எதிர்கொள்ள முடியாததினாலோ உயிரைவிடும் எண்ணத்தைத் எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
2017 ஆம் ஆண்டுத் தங்கை அனிதாவின் பேரிழப்பிற்குப் பிறகு, தமிழகம் கிளர்ந்தெழுந்து ஒற்றைக்குரலில் ஒருமித்துக் குரலெழுப்பியப் பிறகு, கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் விளைவாக, தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்தும் ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. அதன்பிறகு தாங்கள் ஆட்சி வந்தவுடனே நீட்தேர்வை நீக்கிவிடுவோம் என்று வாக்குறுதியளித்து மாணவர்களையும் பெற்றொர்களையும் நம்பவைத்து தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த திமுக அரசும், ‘புதிய மொந்தையில், பழைய கள்’ என்ற அளவில் மீண்டுமொரு வெற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமையை முடித்துக்கொண்டது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் இருப்பதாக சொன்ன திமுகவின் ரகசிய திட்டம் என்னவானது? நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் ஆணையம் தந்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? நீட் தேர்வினால் அடுத்தடுத்து நிகழும் பிள்ளைகளின் மரணங்கள் அத்தேர்வு முறையின் கோரமுகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது. அத்தேர்வு முறை இனியும் தொடர அனுமதித்தால் ஒவ்வோராண்டும் தமிழக மாணவச் செல்வங்களை இழக்க நேரிடும் பேராபத்து நிறைந்திருக்கிறது.
ஆகவே நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகக்கூடாது என்பதில் இனியேனும் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அமர்வில் கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு குறித்தான மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளித்து தமிழக அரசு சட்டப்போராட்டம் செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தம் தந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் தருவதோடு மட்டுமல்லாது நீட் தேர்வையே மொத்தமாய் ரத்துசெய்திட ஆணைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் ‘நீட்’ தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்!https://t.co/leF4yXDJdP@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/zlpw7Wu0ur
— சீமான் (@SeemanOfficial) November 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025