தொடர் மழை எதிரொலி:சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை:அத்தியாவசிய துறைகள் தவிர சென்னையில் மற்ற அனைத்து அரசு அலுவலங்களுக்கு இன்று விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலங்களுக்கும் இன்று விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால்,ஆவின்,பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும்,இவை தவிர சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல,தனியார் நிறுவனங்களும் சூழலை கருத்தில்கொண்டு விடுமுறை அளிக்க முன் வரவேண்டும் அல்லது ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.