உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு அளித்திருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும், என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய அதிமுக.,வின் மனுவை பரிசீலித்து செப்.,29க்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.