“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!
அன்புச்சோலை, தமிழில் அரசாணை என நான் ஏற்கனவே கூறி வருவதை தான் இப்போது அரசு செய்து கொண்டு வருகிறது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை செயல்படுத்தி வருகின்றனர். எப்போதும் தனித்தே தேர்தல் களம் காணும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து தான் போட்டி என அறிவித்து அதற்கான தேர்தல் பணிகளில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் இதுவரை வாக்குக்கு பணம் கொடுத்து வாக்கு பெற்றதில்லை. அது எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.
இன்னும் 4,5 மாசம் தானே தேர்தலுக்கு இருக்கிறது, இதுவரை சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீங்க. இனி சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள். 2026 தேர்தலுக்கு வேறு மாதிரி வியூகம் வகுத்துள்ளேன். எங்கள் ஆட்சி எப்படி இருக்கும்னு நான் வெற்றி பிறகு காட்டுவேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.
நான் ஒன்று சொன்னால் அதனை நீங்கள் (ஆளும் அரசு) செய்துவிடுகிறீர்கள். முதன் முதலாக அன்புச்சோலை என கூறியது நாங்கள் தான். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களை காப்பாற்ற நிறுவோம் என கூறியிருந்தோம். தற்போது அது தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கிறார்கள். பிறகு திடீர்னு தமிழில் அரசாணை என கூறுகிறீர்க்ள். அதனால் நான் எதையும் இப்போது சொல்லவில்லை. ” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.