“2026-ச.பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுதல்;ஆட்சியைப் பிடித்தல்தான் இலக்கு”- டாக்டர்.ராமதாஸ் உறுதி!

Default Image
பாமகவினர் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் இலக்கு என்றும், இந்த இலக்கை அடைய பாமகவினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,புதிய மாவட்ட செயலாளர்களுக்கு  அறிவுறுத்தி தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“கிராமங்களை நோக்கிச் செல்லுங்கள்,மக்களின் ஆதரவை வெல்லுங்கள்,
நமது இலக்கை அடைய உழையுங்கள்!
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புதிய மாவட்ட செயலாளர்களாக நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுவரை இருந்த மாவட்ட செயலாளர் பதவி வேறு, இப்போது வழங்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பதவி வேறு. இப்போது உள்ள மாவட்ட செயலாளர் பதவி தனித்து செயல்படும் அதிகாரம் கொண்டது.
Ramadoss
எப்போது ஒரு பதவிக்கு அதிகாரம் கூடுகிறதோ, அப்போதே அந்த பதவிக்கு பொறுப்பும் கூடுகிறது. அந்த வகையில் இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பதவி அல்ல… பொறுப்பு. ஆதலால், நீங்கள் அனைவரும் உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்; அவ்வாறே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாட்டாளி சொந்தங்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெறும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறீர்கள்.
நமது இலக்கும், இலட்சியமும் மிகவும் பெரியது என்பதை அதை நோக்கி நாம் நீண்ட பயணத்தை விரைவாகவும், காலம் தாழ்த்தாமலும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக உங்களைத் தயார்படுத்துவது தான் இந்தக் கடிதத்தின் நோக்கம் ஆகும்.
புதிய மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய முதன்மைப் பணி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைச் சந்திப்பது தான். இந்தச் சந்திப்பின் போது கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்து அவற்றை செயல்படுத்த வேண்டும்.
“மக்களிடம் செல்லுங்கள்,
அவர்களில் ஒருவராக வாழுங்கள்,
அவர்களை நேசியுங்கள்,
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்,
அவர்களிடமிருந்து தொடங்குங்கள்,
அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள்,
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமையுங்கள்”
என்ற சீன தத்துவஞானி -லாவோ -சீ-யின் தத்துவம் தான் நமக்கான வழிகாட்டல்.
வன்னியர் சங்கத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி என்ற இயக்கத்தையும் நான் அவ்வாறு தான் கட்டமைத்தேன். தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு அவற்றுக்காக நாம் போராடாமல் அவர்களின் ஆதரவை பெற முடியாது.
அதை உணர்ந்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது இல்லாத மகிழுந்துகளும், ஸ்மார்ட் தொலைபேசிகளும் இப்போது சாதாரணமாகி விட்டன. அவை நமது பணிகளை எளிமைப்படுத்த உதவ வேண்டுமே தவிர, மக்களிடமிருந்து விலகியிருக்க வகை செய்யக் கூடாது. மகிழுந்தின் கண்ணாடியைக் கூட இறக்காமல் மக்களையும், கிராமங்களையும் கடந்து செல்வது, தொலைபேசியில் படம் பிடித்து போட்டுவிட்டால் போதும்… நாம் பணி செய்ததாக அனைவரும் நம்பி விடுவார்கள் என்ற எண்ணங்கள் கூடாது. ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் அவர்களின் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் பெயரும், முகமும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகத் தான் கிராமங்களை நோக்கி பயணம் மேற்கொள்ளச் சொல்கிறேன்.
Ramadoss
இப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வந்ததன் அடையாளமாக ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 பேரிடம் மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து பெற வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும்.
அதேபோல், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். தனியாக எதையும் சாதிக்க முடியாது. நிர்வாகிகளிடம் எந்த விதமான விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. நமது மாவட்டத் தலைமை நம்மைத் தேடி வருகிறது; நமது குரலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கிறது என்பதை விட அடிமட்டத் தொண்டனுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் எதுவும் இல்லை.
அதனால் மாவட்ட செயலர்களும், நிர்வாகிகளும் கிராமங்களுக்கு செல்வதையும், மக்களைச் சந்திப்பதையும் முதல் கடமையாக்க வேண்டும். கிராமவாரியான மக்கள் சந்திப்பை இரு வாரங்களில் மாவட்ட செயலாளர்கள் முடிக்க வேண்டும்.
நமது இலக்குகளையும், இலட்சியங்களையும் அடைவதில் ஒன்றிய செயலாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. அதனால், ஒன்றிய செயலாளர்கள் நிலையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. சிறப்பாக செயல்படும் ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பில் தொடர்வார்கள். புதிய ஒன்றிய செயலர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் கட்சித் தலைமையால் ஒரு மேலிடப் பார்வையாளர் குழு அனுப்பப்படும். அந்தக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி புதிய ஒன்றிய செயலாளர்களை தேர்வு செய்வர்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேருவதற்கு பிற கட்சி நிர்வாகிகளும், இதுவரை எந்தக் கட்சியிலும் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களும் தயாராக உள்ளனர். அவர்களுடன் பேசி அவர்களையும் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைக்க மாவட்ட செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. வலிமை பெறுவதற்கு இவை உதவும்.
வரும் 2026- சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு ஆகும். இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எனவே, அனைத்து மாவட்ட செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்; உங்களை விடக் கடுமையாக நானும் உழைப்பேன். அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம்”என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்