தத்தெடுத்த பெற்றோர் இறந்ததால்..15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
கடந்த தத்தெடுத்த பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து ஆதரவின்றி நின்ற துர்கா தேவி என்ற சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன் மற்றும் பிச்சையம்மாள் தம்பதியருக்கு பிறந்த துர்காதேவி என்ற பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு தத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் துர்காதேவியின் வளர்ப்பு பெற்றோர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை விராலிமலை தம்பதியரிடம் தத்தெடுத்த விவரங்களை கூறி விட்டு ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஆதரவின்றி நின்ற துர்காதேவி விராமலையில் உள்ள காவல்நிலையத்தில் சென்று தனது நிஜ பெற்றோர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனையடுத்து விராலிமலை காவல்துறை உதவி ஆய்வாளர் லலிதா பிரியதர்ஷினி மற்றும் திருவேங்கடம் ஆகியோர் சிறுமியின் நிஜ பெற்றோர்களை வரவழைத்து தத்தெடுத்த விவரங்களை கேட்டறிந்து, 15 ஆண்டுகளுக்கு பின்பு துர்காதேவியை அவரது நிஜ பெற்றோர்களான குஞ்சன் மற்றும் பிச்சையம்மாளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வளர்ப்பு பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவித்த துர்காதேவிக்கு தற்போது தனது நிஜ பெற்றோர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவரும், 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகள் கிடைத்த மகிழ்ச்சியில் அவரது பெற்றோர்களும் உள்ளனர். இந்ந நெகிழ்ச்சி சம்பவத்தை அடுத்து விராலிமலை காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.