ஆல் பாஸை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி வராகநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்துவிடலாம், இதனால் மாணவர்கள் அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் அது முக்கியம் கிடையாது. இந்த மதிப்பெண்களை கொண்டு அவர்கள் எந்த கல்லூரியில் சேருவார்கள், எந்த கல்லூரி அவர்களை சேர்த்துக்கொள்ளும்.
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட கூடாது என்று மிகவும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய சூழலில் நாங்கள் உள்ளோம். எனவே, ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம். இன்றைய சூழலை பொறுத்தவரை தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் முழு முடக்கம் முடிந்த பிறகு 12ம் வகுப்பு தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, 12 வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.