திக் திக் நிமிடங்கள்., திருச்சியை வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது.!
திருச்சியிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த நிலையில் தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
திருச்சி : இன்று மாலை 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 140 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளே இழுக்க முடியாமல் இருந்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறுடன் தரையிறங்குவதற்கு ஷார்ஜா விமான நிலையம் மறுத்துவிட்டது. அதன் பிறகு திருச்சி விமான நிலையம், விமானம் பத்திரமாக தரையிறங்க அனுமதி கொடுத்தது. ஆனால், உடனடியாக தரையிறங்கினால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் எரிபொருள் காலியாகும் வரை வானில் வட்டமடிக்க வேண்டிய சூழல் நிலவியது.
அதன் காரணமாக, திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் ஏர் இந்தியா விமானம் வட்டமடித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஆகியவை திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
2 மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தற்போது எரிபொருள் காலியான நிலையில் பத்திரமாக தரையிறங்கியது. இது தொழில்நுப்ட கோளாறு என்றும், இதுபற்றிய முழு விவரங்கள் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.