முதல்வருக்கு பிராண்ட் இல்லை! ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் – அண்ணாமலை பேட்டி
வரும் ஜூலை 9-ம் தேதி பாஜகவின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது என்று அண்ணாமலை அறிவிப்பு.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, உலகளவில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடு இந்தியா தான், இதற்கு காரணம் பிரதமர் மோடி. பிராண்ட் இந்தியாவாக இருக்க கூடிய பிரதமர் மோடியை வைத்து, தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பிரதமருக்கு பிராண்ட் உள்ளது, முதலமைச்சருக்கு பிராண்ட் இல்லை.
முதல்வர் என்ன மாதிரியான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறையை மாற்றியது மதுரைக்கு செய்த துரோகம். அமைச்சரின் ஆடியோ உண்மையானது. அதற்காக அவரை துறை மாற்றம் செய்தது ஏற்புடையது அல்ல. அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே பிரிஜ் பூசன் சரண் சிங்-ஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். கைது செய்தால் தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என தெரியவில்லை எனவு கூறிய பாஜக மாநில தலைவர், கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கூறிய புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது. ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும். வரும் ஜூலை 9-ம் தேதி பாஜகவின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது என்றும் மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.