இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம்.! இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு மனுவை அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.? இபிஎஸ் தரப்பா.? ஓபிஎஸ் தரப்பா யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவை அளித்துள்ளது. அதில் வரும் இடைத்தேர்தலில் நாங்கள் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். அதிமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பெயரில் நான் கையெழுத்திட்ட விருப்ப மனுவை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தலைமையில் இந்த மனுவை பற்றி விசாரிக்கையில், இந்த மனு பற்றி ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டீர்களா என்று கேட்கப்பட்டது? அவர்கள் இந்த மனு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டனர். இருந்தாலும் இன்று இந்த மனுவை ஏற்க முடியாது. நீங்கள் திங்கள் கிழமை இந்த முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று குறிப்பிட்டனர்.
இதனை தொடர்ந்து திங்கள் கிழமை மீண்டும் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை உச்சநீதிமன்ற அமர்வு ஏற்று கொள்ளுமா என்று திங்கள் கிழமை தெரிய வரும்.