மூக்கையா தேவரின் வெண்கல சிலை விவகாரம்.! ஒரே மேடையில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் எதிரெதிர் கருத்து.!
மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் எதிரெதிர் கருத்துக்களை தெரிவித்து கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து 5 முறை உசிலம்பட்டி எம்எல்ஏவாகவும், ஒரு முறை ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறைந்த மூக்கையாத்தேவர். இவரது நூற்றாண்டு விழா நேற்று அவரது சொந்த ஊரில் கொண்டாடப்பட்டது.
ஆர்.பி.உதயகுமார் :
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் மூக்கைத்தேவர் அறக்கட்டளை சார்பாக விழா ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது. இந்த விழாவுக்கு முதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
அமமுக எதிர்ப்பு :
அவர் பேசுகையில், மூக்கையா தேவருக்கு வெண்கல சிலை அமைக்க அரசாணை வெளியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிட்டார். இதற்கு அவர் பேசும்போதே அங்கிருந்த அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மேடையில் சலசலப்பு நிலவியது. அதனை அடுத்து அங்கிருந்து ஆர்.பி.உதயகுமார் புறப்பட்டார்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ :
அடுத்ததாக, ஓபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏவுமான ஐயப்பன் பேசுகையில், மூக்கையா தேவருக்கு தனது சொந்த செலவில் வெண்கல சிலை அமைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் என குறிப்பிட்டார். ஒரே மேடையில் அடுத்தடுத்து எதிரெதிர் கருத்துக்களை இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.