அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி – அமலாக்கத்துறை சம்மன்..!
பண மோசடி புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சிலரால் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதனால்,அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் ,நண்பர்கள் என பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி,சண்முகம்,ராஜ்குமார்,அசோக் குமார் என நான்குபேர் மீது ஒரு வழக்கும் ,37 பேர் மீது 2 வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்படிருந்தது.இது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.
இதனையடுத்து,பணத்தை திருப்பி தந்துவிட்டதாக புகார் அளித்தவர்கள் கூறியதை அடுத்து,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,சண்முகம், ராஜ்குமார்,அசோக் குமார் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,மீதமுள்ள இரண்டு வழக்குகளில் பண மோசடியை மையமாக வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வருகின்ற 11 ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.