கொரோனாவால் ஆட்டோவை வடை கடையாக மாற்றிய ஓட்டுநர்!
கொரோனாவால் வாழ்வாதாரத்திற்காக தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டுக்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் என்ன செய்வதென்றே தெரியாமல் கடந்த சில மாதங்களாகவே அப்படியே நின்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர்.இந்நிலையில், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளது. இவர் கோச்சடை பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருமானம் தேடி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து மூன்று மாதங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆம் கட்ட தளர்வாக ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதித்தது. இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வருமானம் இன்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் பாலசுப்பிரமணியம் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றி 4 வடை பத்து ரூபாய் என விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
ஆட்டோவில் அடுப்பு, வடை சுடும் பாத்திரம், வடை கண்ணாடிப் பெட்டி என சவாரி செய்யப் பயன்பட்ட ஆட்டோ தற்பொழுது முழுவதுமாக வடை கடை போலவே மாறி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டினாலும் எனக்கு ஹோட்டல் தொழிலும் தெரியும். ஹோட்டல் ஒன்று வைத்திருந்தேன்,பொதுமக்கள் வெளியில் சாப்பிட அஞ்சுகின்றனர். இதனால்ஹோட்டலையும் மூடி விட்டேன். எனது ஆட்டோ வடை கடையை வைத்து அதன் மூலம் 500 ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஈட்டி வருகிறேன். அரசு விரைவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.