ஏடிஎம்மில் பணம் நிரப்பும் நேரத்தில் ரூ.52 லட்சம் எடுத்து சென்ற கார் டிரைவர் .!
- கடந்த 19-ம் தேதி ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்ப ரூ.87 லட்சம் பணம் கார் மூலம் அனுப்பப்பட்டது.
- ஏடிஎம்மில் பணநிரப்பும் ஊழியர்கள் பணத்தை எடுத்து கொண்டுஏடிஎம் சென்று உள்ளனர். காரில் தனியாக இருந்த டிரைவர் ரூ.52 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு சென்று விட்டார்.
கடந்த 19-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்ப ரூ.87 லட்சம் பணம் கார் மூலம் அனுப்பப்பட்டது. அந்தக் காரில் தனியார் நிறுவனத்தின் சூப்பர்வைஸர் வினோத் (28) பணம் நிரம்பும் ஊழியர் வினோத் (26) மற்றும் துப்பாக்கி உடன் பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது என்பவரும் சென்றனர்.
அந்த காரை வேளச்சேரியைச் சேர்ந்த ஆம்ரோஸ் (40)என்பவர் ஒட்டி உள்ளார். பணத்தை ஏற்றி சென்ற அந்த வாகனம் வழியில் உள்ள அனைத்து ஏடிஎம்களில் பணத்தை நிரப்பி கொண்டே சென்றது.
இந்த வாகனம் வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப சூப்பர்வைஸர் வினோத், பணம் நிரப்பும் ஊழியர் மற்றும் துப்பாக்கியுடன் சென்ற முகமது ஆகியோர் பணத்துடன் ஏடிஎம்க்கு சென்று உள்ளனர்.
வாகனத்தில் டிரைவர் ஆம்ரோஸ் மட்டும் இருந்து உள்ளார்.அப்போது எதிரில் ஒரு லாரி வந்துள்ளது. இதனால் லாரிக்கு வழிவிட ஆம்ரோஸ் காரை ஓரமாக நிறுத்த வாகனத்தை எடுத்து உள்ளார். ஏடிஎம்க்கு பணம் நிரப்பி விட்டு வந்து பார்த்தபோது ஆம்ரோஸ் காருடன் காணவில்லை உடனே ஆம்ரோஸுக்கு சூப்பர்வைஸர் வினோத் போன் செய்து உள்ளார்.
ஆனால் ஆம்ரோஸ் போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது.பின்னர் வினோத் வேளச்சேரி காவல் நிலையத்திலும் , சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து போலீஸார் வினோத்திடம் விசாரித்தபோது காரில் ரூ.52 லட்சம் பணம் இருந்ததாக கூறினார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஆம்ரோஸ் காரில் வேகமாக சென்றது தெரியவந்தது.
டிரைவர் ஆம்ரோஸ் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து கொண்டு காரை சிசிடிவி உதவி மூலம் போலீசார் பின்தொடர்ந்தனர். காரைப் பின்தொடர்ந்த போலீஸார் கொருக்குப் பேட்டையில் அருகே நின்றுகொண்டிருந்த காரை மீட்டு ஆம்ரோஸிடமிருந்து ரூ.20 லட்ச பணத்தையும் , அவரின் மனைவியிடமிருந்து ரூ.32 லட்ச பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
போலீஸ் நடத்திய விசாரணையில் ஆம்ரோஸ் “பணத்தைப் பார்த்ததும் புத்தி மாறிவிட்டது” என கூறினார்.