வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை… காவலர்களுக்கு விடுமுறை முதலிய திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்கள்…
வரும் சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.
அந்த அலோசனையில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் விவாதித்தது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது,
- குடும்பத்தில் படித்த ஒருவருக்கு, அரசு வேலை,
- காவலர்களுக்கு வார விடுமுறை,
- அரசு மருத்துவமனைகளில் உயர் தரமான சிகிச்சை,
- பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு ஆகிய அறிவிப்புகள்,
- தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம் என்றும்
- மேலும் ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம்,
- கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான திட்டம் ஆகியவை குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றும்,
- மேலும், பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு கட்டணமில்லாமல் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பது,
- கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது,
- கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது என்றும்,
- மேலும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது,
- பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்துள்ளனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.