மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி – இபிஎஸ் பேச்சு

Edappadi Palanisamy

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, பல்வேறு நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பூத் கமிட்டி வலுவாக இருந்தால் தான் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.

தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். அதனை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய கடமை உள்ளது. திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 95% நிறைவேற்றியதாக பச்சை பொய் சொல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக வாக்குறுதிகளில் வெறும் 10% மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி.  அதிமுக ஆட்சியில் அறிவித்ததை மட்டுமின்றி அறிவிக்கப்படாத திட்டங்களையும் நிறைவேற்றினோம். 7.5% இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகியுள்ளனர். கண்ணின் இமை காப்பது போன்று, சிறுபான்மை மக்களை காப்பதில் அதிமுக முதன்மையாக திகழ்கிறது. பல பேர் வாக்குகளுக்காக எதை, எதையோ பேசுவார்கள் நாங்கள் அப்படி கிடையாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்