ஒரு பக்கம் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கி மக்களை ஏமாற்றும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

Default Image

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது.  அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துவிட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது.

இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்றழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது.

பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்த தி.மு.க. அரசு தற்போது அனைத்து உப பொருட்களின் விலையினையும் உயர்த்தியுள்ளது.வெளிச் சந்தையை ஒப்பிடும்போது, தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள், ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களையே வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவின் விற்பனை நிலையங்களில் பால் உப பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில், பால் உப பொருட்கள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள் இன்னும் அதிகம் வாங்கக்கூடிய நிலையில், இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் உப பொருட்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்