பச்சைத் துரோகம் செய்யும் திமுக அரசு.. இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான்

Default Image

தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளது.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை (CMWSSB) சேர்ந்த தூய்மை தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு அவர்களின் உழைப்பை உறிஞ்சி, வஞ்சித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அதுமட்டுமின்றி, தற்போது அப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பைத் தனியாருக்குத் தாரைவார்த்ததன் மூலம், தூய்மைத் தொழிலாளர்களின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினை விழலுக்கு இறைத்த நீராக எவ்வித பதில் பயனுமின்றி வீணடித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தங்களின் நியாயமான உரிமைகளை வழங்க வேண்டி, அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், போராடும் ஊழியர்களைக் காவல்துறை மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகத்தின் மூலம் மிரட்டி அச்சுறுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்கத் தூய்மை தொழிலாளர்களுக்குத் திமுக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

எனவே, பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை (CMWSSB) சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்