ரசாயனம் கலந்த விபூதியால் கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த விபரீதம் ..!
தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ரசாயனம் கலந்த விபூதி பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் மதுசவுடாம்பிகை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவில், அம்மன் ஊர்வலத்தை காண வந்திருந்தவர்கள் மீது விபூதி தூவப்பட்டது.
இந்நிலையில், விழா முடிந்து வீட்டிற்கு சென்ற பத்கர்களுக்கு திடீர் கண் எரிச்சல், கண்வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கண் பாதிப்பு சரியாகாததால் இன்றுகாலை, 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தனியார் கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அலர்ஜி காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நறுமனத்திற்காகவும் வெள்ளை நிறத்திற்காகவும் விபூதிகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்டு பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரசாயனம் கலந்த விபூதி கண்ணில் பட்டால் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.