அதிமுகவின் அழிவு எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கிவிட்டது- புகழேந்தி..!
எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என இன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த நிலையில் புகழேந்தி உள்ளிட்ட சிலரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வா.புகழேந்தி கூறுகையில், சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நல்ல அரசியல் எதிரியை இனி சந்திக்க உள்ளார். அவர் சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்காக பாமகவின் ஆதரவை எதிர்பார்த்து என்னை நீக்கியுள்ளார்கள்.
சசிகலா ஆதரவில் இருந்து விலகிய பின் தொலைபேசியில் கூட நான் பேசியதில்லை. அதிமுகவில் இருந்து என்னை நீக்க பலமுரை முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதை செய்துள்ளார். இடிஅமீனின் குணங்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் பார்க்கிறேன். மத்திக்கு அதிமுகவை அசிங்கப்படுத்தியவருக்கு கண்டனம் கூறியது தவறா..? அதிமுகவின் அழிவு எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கிவிட்டது. கட்சியை கைக்குள் கொண்டு வந்து அனைவரையும் அடிமைப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார் எனக் கூறினார்.