தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!
மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பருவமழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.
மீட்புப் பணிகளுக்குத் தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க வேண்டும். அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.