எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது-மைத்ரேயன்

Default Image

அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அம்மா, கலைஞர் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள்  அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

நேற்று தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை யொட்டி மைத்ரேயன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். 2016 டிசம்பர் 5ம் தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவு நம் அனைவருக்கும் மீளாத துயரத்தை தந்தது. அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி கலைஞர் காலமானார்.

அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அம்மா, கலைஞர் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

அறுபதுகளில் நான் பள்ளி மாணவனாக இருந்த போது கேட்ட ஒரு அரசியல் பொதுக்கூட்டம் எனது நினைவுக்கு வருகிறது.
1967 ல் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு 1968 ல் சென்னை மாநகராட்சித் தேர்தல். மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை ஒட்டிய வார்டுக்கு திமுக சார்பில் மயிலை சாரங்கனும் காங்கிரஸ் சார்பில் டாக்டர் ரமாதேவியும் போட்டி. அப்போது அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். திமுக சார்பில் அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது அதைக் குறை கூறி பேசினார். அடுத்த நாள் சாய்பாபா கோயில் பாலம் அருகே ஸ்தூபி இடத்தில் கலைஞர் கலந்து கொள்ளும் திமுக பொதுக்கூட்டம். அன்று தான் நான் முதல் முறையாக கலைஞரை நேரில் பார்த்தேன். அப்போது எனக்கு பதிமூன்று வயது. 8 ம் வகுப்பு மாணவன். கலைஞர் பேசும் போது ” அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்று கேட்டோம். அது தவறா? இல்லை என்றால் எப்படி கேட்பது? சுப்ரமணியம் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்றா கேட்பது? ” என்று பதிலடி கொடுத்து பேசியது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி.

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் ஜெ., கருணாநிதி மறைவால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது .இவ்வாறு தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்