“மாமனிதர் நன்மாறன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு” – ஓபிஎஸ் இரங்கல்..!

Default Image

முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றவரும், தமுஎகச வில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில்,நன்மாறன் ஐயா மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், இலக்கிய ஆற்றல் படைத்தவரும், பத்தாண்டு காலம் சட்டமன்றத்தில் என்னிடம் நெருங்கிப் பழகியவருமான திரு. என். நன்மாறன் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் ஆணித்தரமாக, அதே சமயத்தில் அமைதியான முறையில் எடுத்துரைத்தவர் திரு. நன்மாறன் அவர்கள். அமைதியின் மறு உருவமாகவும், எளிமையின் சிகரமாகவும், மனிதநேயம் மிக்கவராகவும் விளங்கிவந்த திரு. நன்மாறன் அவர்கள் ஏழையெளிய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.

பொதுமக்களுக்காக, குறிப்பாக ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாமனிதர் திரு. என் நன்மாறன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு ஆகும். அவருடைய இடத்தை இனி வேறு யாராலும் நிரப்பமுடியாது.

திரு. நன்மாறன் அவர்களை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்