வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!
Election2024 : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த சூழலில், இன்று வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.
இதனால் கூடிய விரைவில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. 39 தொகுதிகளிலும் ஆண்கள் 1,509 பேர், பெண்கள் 240 பேர் என மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
1,749 வேட்புமனுக்களில் 650 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,099 வேட்புமனுக்களில் 9 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 1,090 வேட்புமனுக்களை ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரோடு தொகுதியில் 8 பேரும், தருமபுரியில் ஒருவரும் வாபஸ் பெற்றுள்ளதாகவும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைதேர்லுக்கு 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. முதலில் பதிவு செய்ய கட்சிகளுக்கும், பிறகு சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.