காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரணத்தில் அடுத்தடுத்த திடுக்கிடும் திருப்பங்கள்…

Jayakumar

காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது வரையிலான நிகழ்வுகளில் தொகுப்பு.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி உவரி காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வருகிறது. அதில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என்றும் கடைசியாக மே 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவரது மகன்கள் ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் இந்த புகாரை தெரிவிக்கின்றனர்.

எரிந்த நிலையில் சடலம் :

சாதாரண காணாமல் போன நபரை தேடும் வழக்காக கையில் எடுத்து புகாரை விசாரிக்க தொடங்கிய காவல்துறைக்கு அன்றைய தினமே பேரதிர்ச்சி காத்திருந்தது. உவரி அருகே ஜெயக்குமாரின் சொந்த தோட்டத்திலேயே எரிந்த நிலையில் சடலம் இருக்க, அதன் அருகே ஜெயக்குமாரின் சில பொருட்கள் இருக்க டி.என்.ஏ சோதனைக்கு முன்பே உயிரிழந்தது ஜெயக்குமார் தான் என்று உறுதி செய்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது.

8 தனிப்படைகள் :

நெல்லை மாவட்டத்தில் மிக முக்கிய காங்கிரஸ் பிரமுகரின் கோர மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பற்றிக்கொண்டது. நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வெகு தீவிரமாக தனது தலைமையில் விசாரணையை துரிதப்படுத்தினார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணை தீவிரமடைந்த வேளையில் அடுத்தடுத்த திருப்பமாக பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறின.

கொலை மிரட்டல் புகார் :

அதில், ஒன்று அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னர் காவல்துறைக்கு ஜெயக்குமார் எழுதியதாக இணையத்தில் பரவிய கடிதம். அதில் தனக்கு சில கொலை மிரட்டல்கள் இருக்கிறது என்றும், சிலர் தன் வீட்டை நோட்டமிடுகின்றனர் என்றும் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இதனை அடுத்து, காவல்துறை முன்னரே முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சலசலப்புகளும் எழுந்தன. இருந்தும் இந்த கடிதம் பற்றி காவல்துறையினர் உறுதிபட எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்கள் விசாரணையை மேலும் துரிதப்படுத்தினர்.

அரசியல் புள்ளிகள் :

மேலும், ஜெயக்குமார் எழுதிய குறிப்பேட்டில்(டைரி), தன்னிடம் பணம் வாங்கியதாக சில முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்களும் இருப்பதாக செய்திகள் அடிபடவே தமிழக அரசியல் வட்டாரமே அதிர்ந்தது. இதனால் இந்த வழக்கு மேலும் உற்றுநோக்கப்பட்டது.

இதனை அடுத்து,நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு, நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் , முன்னாள் காங்கிரஸ் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமாரின் மனைவி, மகன்கள் ஜெஃப்ரின், மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் உறவினர்கள், வீட்டு உதவியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணையை தொடர்ந்தனர் நெல்லை மாவட்ட காவல்துறையினர்.

டிஎன்ஏ சோதனை :

இதற்கிடையில், உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை ஆய்வு செய்ய எரிந்த நிலையில் கிடைக்கப்பட்ட உடலின் டிஎன்ஏ மற்றும் ஜெயக்குமாரின் மகன் டிஎன்ஏவை ஒப்பிட்டு உறுதி செய்ய மாதிரிகள் மதுரை டிஎன்ஏ ஆய்வகதிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை என தெரிகிறது. அதற்குள் கடந்த மே 5ஆம் தேதி ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

மேலும், பிரேத பரிசோதனை முடிவில் ஜெயக்குமாரின் வாய் பகுதியில் பாத்திரம் விளக்கும் இரும்பு பிரஸ் துகள்கள் இருந்ததாகவும், கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த தடம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போதைய நிலை :

இதனை அடுத்து, ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து சுமார் 10 கிமீ சுற்றளவில் தற்போது சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவரது செல்போன் கடைசியாக எங்கு ஆஃப் செய்யப்பட்டது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட நாளன்று மாலை தனியே அவர் மட்டும் கார் ஒட்டி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் , நேற்று இரவு முழுவதும் ஜெயக்குமார் மகன்களிடம் விசாரணை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படியான சூழலில் போலீசார் மேலும் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்