அரசு வேலை.. பண மோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை.! .
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சராக அப்போது பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று 2 மாதத்திற்குள் இந்த புகார் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அடுத்து தான் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் கொடுத்தவர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் குறிப்பிட்ட ஆவணங்களோடு நேரில் வந்து சந்திக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 89 பேரிடம் 1 கோடியே 67 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.