அதிரவைக்கும் அப்போலோ செலவு…!ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவு ..!ஆணையத்தில் தகவல்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் செலவுக் கணக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் செலவுக் கணக்கை தாக்கல் செய்துள்ளது.அதில் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584 ஆகும்.அதில் பிசியோதெரப்பிக்கு மட்டும் ரூ. 1.29 கோடி செலவானது.ஜெயலலிதா தங்கியிருந்த 75 நாட்களுக்கு அறை வாடகை மட்டும் ரூ. 24 லட்சம் ஆகும். சசிகலா குடும்பத்தினர் தங்கிய அறைக்கான வாடகை மட்டும் 1.24 கோடி ஆகும். ஜெயலலிதா தங்கியிருந்த அறை வாடகையை விட இது பல மடங்கு அதிகம்.அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது.
இங்கிலாந்து டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ. 92 லட்சம் ஃபீஸ் செலுத்தப்பட்டது அப்பல்லோவுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 45 லட்சம் ஆகும். மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்.13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது.ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.