“முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை;இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை பாதிக்க கூடாது” – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

Default Image
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை நிபந்தனைகள் பாதிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதி குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதி குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகஇது அரசின் தவறில்லை என்றாலும் கூட, இந்த பாதிப்பை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1938 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இரு வகையான கலந்தாய்வுகள் மூலம் நிரப்பப்படவுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தால் நிரப்பப்படும். மீதமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு சேவை ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் குறைந்தது இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பாக அரசு மருத்துவர் பணியில் இரு ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் மட்டும் தான் இதற்கு தகுதி பெற்றவர்கள். இந்த ஆண்டும் அதே நிபந்தனை தான் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சூழலில் அதனால் பாதிப்பு இல்லை; ஆனால், இன்றைய கொரோனா சூழலில் அது பாதிக்கிறது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ர்வரி/மார்ச் மாதத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். கடந்த ஆண்டு வரை இதுதான் வழக்கமாக இருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி தான் நடைபெற்றது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை ஆகியவற்றுக்கான தேதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அனேகமாக இவை அடுத்த மாத இறுதியில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பிப்ரவரி/மார்ச் மாதத்தில் நடக்கும் போது, அதற்கான சேவை இட ஒதுக்கீட்டை பெற விரும்பும் அரசு மருத்துவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இரு ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நியாயமானது. ஆனால், நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் தான் கலந்தாய்வு நடைபெறவுள்ளது எனும் நிலையில், அதற்கான சேவை ஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கு 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக இரு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்பது நியாயமற்றது. இந்த நிபந்தனையால் கடந்த மார்ச் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அரசு மருத்துவராக இரு ஆண்டுகள் பணி நிறைவு செய்த இளம் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேவை ஒதுக்கீட்டில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவர். இது நியாயமல்ல.
அரசு மருத்துவமனைகளுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் மார்ச் மாதமும், ஜூலை மாதமும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் மார்ச் மாதம் நியமிக்கப்பட்டவர்கள் தகுதிகாண் தேதிக்குட்பட்டு, சேவை ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கப்படுவார்கள். ஆனால், ஜூலை மாதத்தில் மருத்துவர் பணியில் நியமிக்கப்பட்டவர்கள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் போது, இரு ஆண்டுகள் பணி செய்திருந்தாலும் கூட, அவர்களால் சேவை ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர இயலாது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை.
செய்யாத தவறுக்காக அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது.
இந்த விஷயத்தில் அரசோ, மருத்துவக் கல்வி இயக்குனரோ தெரிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. மாறாக, முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வும், கலந்தாய்வும் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக நடப்பதால், அதற்கேற்ற வகையில் சேவை ஒதுக்கீட்டிற்கான தகுதிகாண் நாளை திருத்தியமைக்கத் தவறிவிட்டனர்.
அதனால், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலைக் கல்வி வாய்ப்பை இழப்பார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாகத் தான் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது நடப்பாண்டில் மட்டுமே நிகழும் தனித்த நிகழ்வு ஆகும். எனவே, இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி நடப்பாண்டில் மட்டும் செப்டம்பர் மாதம் வரை இரு ஆண்டுகள் அரசு மருத்துவர் பணியை நிறைவு செய்தவர் சேவை ஒதுக்கீட்டை பெறும் வகையில் அதற்கான தகுதிகாண் தேதியை அரசு மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்