+2 வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்புக்கு வழியில்லாத மாணவிக்கு வீடு தேடி சென்று உதவிய ஆட்சியர்!
பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்புக்கு வழியில்லாததால் வசதி இல்லாததால் ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவியை நேரில் சென்று உதவி செய்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே உள்ள அக்ரா பாளையம் என்னும் கிராமத்தில் உள்ள பெரணமல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தவர் தான் பரிமளா. இவர் இறுதித் தேர்வில் 600க்கு 502 மதிப்பெண்கள் என பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இவரது தந்தையும் அண்ணனும் கூலி வேலை செய்து இவருக்கு படிப்பு தேவைகளை சந்தித்து வருகின்றனர். தாயாருக்கு காது கேட்காது, இந்நிலையில் குடும்ப வறுமை நிமித்தமாக பள்ளி முதல் மாணவியாக வந்தும் மேல்படிப்புக்கு வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு பரிமளா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் என் வீட்டில் அனைவருமே கூலி வேலை பார்த்து தான் என்னை படிக்க வைக்கின்றனர். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் மேல்படிப்புக்கு வசதி இல்லாததால் படிக்க முடியாமல் இருக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார். மாணவியின் கடிதத்தை படித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி மாணவி பரிமளாவின் வீட்டுக்கு நேரில் சென்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பட்டப்படிப்பு மற்றும் தங்கும் விடுதி செலவையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
இத்துடன் மட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மாணவி பரிமளாவின் வீட்டை நேரிலேயே பார்த்ததால், அவர் பசுமை வீடு திட்டத்தில் அவர்களுக்கு வீடு கட்ட பணி ஆணையும் வழங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் கூறுகையில், மக்கள் அனைவரும் பணிக்கு சென்று பின்னர் வீடு கட்டுவார்கள். ஆனால் பரிமளாவின் வாழ்க்கையில் பசுமை வளரவேண்டும் என்பதற்காக பசுமை வீடு வழங்குகிறேன் என கூறியுள்ளார்.