ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு… எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்…
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். மேலும், ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்று தமிழக அரசு காட்டம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு தொடர் போராட்டம் மற்றும் துப்பாக்கிசூடுகளை தொடர்ந்து கடந்த 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது.
இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதில் சென்னை ஐகோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். இதில் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் தான், அதனை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு தரப்பின் வாதத்தை கேட்டு ஒருதலைபட்சமாக உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது என்ற ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்றே கூறவேண்டும். எனவே இந்த ஒரு காரணத்தை அடிப்படையாக கொண்டே ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.