“தி.நகர் தீவுநகராக காட்சி:எங்கும் அலட்சியம்,எல்லாவற்றிலும் ஊழல்” -ம.நீ.ம. து.தலைவர் ஏ.ஜி.மௌரியா!

Default Image

சென்னை:அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு இருப்பதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஏ.ஜி.மௌரியா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக,தி.நகர் பகுதியில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில்,ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக தி.நகரில் மட்டும் ரூ.200 கோடி செலவிடப்பட்டிருப்பதாகக் கணக்கு உள்ளதாகவும்,ஆனால், மழை பெய்தால் தி.நகர் தீவுநகராகி விடுகிறது. இத்தனை கோடிகளைச் செலவழித்தும் நம் நகரம் வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன? என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவரும்,ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.ஜி.மௌரியா கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“சென்னை மாநகர் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்குள்ளாகி யிருக்கிறது. ‘ஒரு நாள் மழைக்கே மூழ்கும் நகரம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை.

கூவம், அடையாறு போன்ற ஆறுகள், 16 கால்வாய்கள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே மழைக்காலங்களில் சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு முக்கியக் காரணம். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து தமிழக அரசு இன்னும் சரியான பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் பராமரிப்புப் பணிகளுக்காக, சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை பலநூறு கோடி ரூபாய்! கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘மாபெரும்’ மழைநீர் வடிகால் தூய்மைப் பணி நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஆனால், அதன் பலன்களை நம்மால் காண முடியவில்லை.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக தியாகராய நகரில் மட்டும் ரூ.200 கோடி செலவிடப்பட்டிருப்பதாகக் கணக்கு. ஆனால், மழை பெய்தால் தி.நகர் தீவுநகராகி விடுகிறது. இத்தனை கோடிகளைச் செலவழித்தும் நம் நகரம் வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன? மோசமான நிர்வாகம், தொலைநோக்குப் பார்வையின்மை, முறையான திட்டமிடல் இல்லாமை, சீர்குலைந்துள்ள மழைநீர் வடிகால் அமைப்பு, கால்வாய்களின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பது, பராமரிப்புப் பணிகளில் சுணக்கம், ஏரிக்குள் குடியிருப்புகள்… என, பட்டியல்கள் நீள்கின்றன. எங்கும் அலட்சியம்; எல்லாவற்றிலும் ஊழல்.

‘2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, ஆறு ஆண்டுகள் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விக்கு பதில் என்ன? ‘வெள்ளநீரை வெளியேற்ற முடியவில்லை. ஆகவே, மக்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து அகற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்பதை பதிலாகச் சொல்லப்போகிறதா அரசு?

வழக்கமான பருவமழைக் காலங்களில் மட்டுமல்லாமல், பருவநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் இயற்கைச் சீற்றங்களையும் சந்திக்க, சென்னை தயாராக வேண்டும் என்பதைத்தான் இம்மழை நமக்கு உணர்த்துகிறது.

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு இருப்பதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எதிர்காலத்திலாவது இப்படிப்பட்ட அவதிகள் ஏற்படாமல் இருக்க வேண்டும்.அதற்கு தற்காலிகத் தீர்வுக்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வையுடனான தெளிவான திட்டங்கள் ஊழல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்