இறந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!
தேனியில் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்ட உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.
தாமரைக் குளத்தை சேர்ந்த பிளவேந்திர ராஜா, ஆரோக்கியமேரி தம்பதியருக்கு ஆறு மாதத்தில், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெற்றோரை அழைத்து குழந்தையை பிளாஸ்டிக் பாக்கெட்டில் போட்டு, குழந்தை இறந்து விட்டதாக கூறி குழந்தையை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய சென்றபோது 2 மணி நேரம் கழித்து அந்த குழந்தை கைகளை ஆட்டியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு இதய துடிப்பு இருந்ததால் சிகிச்சைக்காக மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன் அவர்கள் கூறுகையில், இந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே எடை இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.