ஸ்டாலின் கூறியபிறகு விவசாய கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்தது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி கருத்து
விவசாயிகள் கடன் சுமையால் துவண்டபோதே தள்ளுபடி செய்திருக்கலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து கூறுகையில்,தமிழக அரசு பயிர் கடன்களை ரத்து செய்திருப்பது சந்தர்ப்பவாதம்.தேர்தல் வருகிற நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொன்ன பிறகு விவசாய கடனை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்தது சந்தர்ப்பவாதம்.விவசாயிகள் கடன் சுமையால் துவண்டபோதே தள்ளுபடி செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.