சட்டப்பேரவையிலேயே திமுக எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!
தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை.
தமிழக சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டியிருந்தார்கள்.
இதுபோன்று புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரையமாவதாக கூறி, இதனை செய்யவேண்டாம் என தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றே கண்டிப்புடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புகழ்ந்து பேசிய திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் நேரத்தை வீணடித்தால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேரத்தின் அருமை கருதி மானியக்கோரிக்கை விவாதத்தில் என்னை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எதையும் லிமிட்டாக வைத்துக்கொள்ளுங்கள், நேற்றே அவை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்ததாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மானிய கோரிக்கை விவாதத்தில் புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறியும், திமுக எம்எல்ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசியதால் முதலமைச்சரை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.