இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது.இதனிடையே இன்று ,மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது” என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. “பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துபூர்வமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க. அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க. அரசும் – அ.தி.மு.க. அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.
எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல் – சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் – மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் – இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை!
அதிமுக – பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது.
இந்த ஆண்டே #Reservation அமல்படுத்தவில்லையெனில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இருக்கிறதா? pic.twitter.com/O8qVxOMQYI
— M.K.Stalin (@mkstalin) October 26, 2020