தமிழகத்தில் நாளொன்றுக்கு 20,000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குக….! மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்திய தமிழக முதல்வர்…!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களிடம், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டேசிவிர் மருந்தை, தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த மருந்து தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், 6 பெருநகரங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டேசிவிர் மருந்து குப்பிகள், அதாவது நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ் நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை. நாளொன்றுக்கு 20,000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குமாறும், இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 7000 #Remdesivir மருந்துக் குப்பிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை.
நாளொன்றுக்கு 20000 குப்பிகளை வழங்கிட மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் @PiyushGoyal இடம் தொலைபேசியில் வலியுறுத்தினேன்.
பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். pic.twitter.com/6XuWNxFqjB
— M.K.Stalin (@mkstalin) May 10, 2021